இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரசியல் நேர்மையை இந்திய அரசு இழந்து விட்டது: ஆர்.நல்லகண்ணு
Posted: December 15, 2010 in Uncategorized| இலங்கையின் இரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த இரத்தக் கண்ணீர், இன்றைக்கு இரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை’ என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. |
| கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்தித்தோம். |
“இலங்கையில் அந்த மண் தோன்றிய காலத்தில் தோன்றிய, அந்த மண்ணுக்குச் சொந்தமான பூர்வீகக் குடிமக்களான தமிழர்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இதில் பிரபாகரனா? விடுதலைப்புலிகளா? என்கிற பேச்சுக்கு இடமே இல்லை. நம்மைப் போல் தமிழ் பேசும் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவசர, அவசியம்.
`கிளிநொச்சியைப் பிடித்துவிட்டோம்’ என்கிறார்கள். அப்படியென்றால் அங்கு நடப்பது போர் என்பது உறுதியாகிவிட்டது. அதுவும், தமிழ் மக்கள் மீதான போர். இலங்கையின் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஐந்து கண்டங்களில் பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் புகலிடம் தேடி தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஏழு கோடித் தமிழர்களும், உலகத் தமிழர்களும் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த இந்திய குடியரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சார்க் பிரதேசங்களில் அமைதி ஏற்பட, இந்திய அரசு தலையிட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது. இந்திய அரசோ, அந்த முயற்சியைச் செய்யத் தவறிவிட்டது; தயக்கம் காட்டுகிறது. இதன் மூலம், நேரு பாரம்பரியத்துக்கு எதிரான விரோதமான போக்கை இந்திய அரசு கடைப்பிடிக்கிறது. அரசியல் நேர்மையை இழந்து விட்டது” என்றவரிடம், `அது என்ன நேரு பாரம்பரியம்?’ என்று கேட்டோம்.
“1960-ம் ஆண்டு மார்ச் மாதம் சார்ப்வில்லா, லங்கா நகரமைப்பு ஆகிய இடங்களில் காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்த ஆபிரிக்கர்களுக்கு இந்திய நாடாளுமன்ற அவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்தப் பிரச்னையை உள்நாட்டுப் பிரச்னையாக ஏற்று, ஒதுக்கிவிட பண்டித நேரு மறுத்தார். காரணம், உலகத்தில் எந்த நாட்டிலும் ஜனநாயகத்துக்கு விரோதமான நிலை உருவானால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு நாட்டின் கடமை. ஆனால், `இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம்’ என்று கூறிக் கொண்டே இந்திய அரசு, இலங்கைக்கு இராணுவ உதவிகளைச் செய்து வருவது வேதனையாக இருக்கிறது.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைக் கண்டித்து பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலிஸாரைஸ் இந்தியாவை வற்புறுத்தி வருகிறார். போர் தேவையா? இல்லையா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அதே பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளோடு கைகோத்துக் கொண்டு இந்திய இராணுவ அதிகாரிகள் கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை இராணுவத்துக்கு வியூகம் அமைத்துக் கொடுக்கிறார்களே, இது எந்த வகையில் நியாயம்? பாகிஸ்தான்-இந்தியாவுடன், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய ஏழு நாட்டு இராணுவ அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்த செய்தியே வேதனையாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப் பேரவையில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் இசைவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் மாதமும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் நான்காம் தேதி அனைத்துக் கட்சிக் குழுவினர்களுடன் டெல்லி சென்ற முதல்வர், பிரதமரைச் சந்தித்தார். அப்போது அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக அறிவித்தது, மத்திய அரசு. ஒரு மாதத்துக்கு மேலாகியும், பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. காரணம் கேட்டால், `அழையா விருந்தாளியாக அவரை அங்கு அனுப்ப முடியாது’ என்கிறார், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
பிரணாப் முகர்ஜி என்ன விருந்து சாப்பிடவா அங்கு போகிறார்? செத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்றத்தானே போகச் சொல்கிறோம். இங்கிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவு; விமானத்தில் அரை மணி நேரப் பயணம். இருந்தும் தமிழர்களைக் காப்பாற்ற இலங்கைக்குப் போக முடியாது என்கிறார்கள்.
உண்மையில் இந்திய அரசை இலங்கை அரசு மதிப்பதே இல்லை. கச்சதீவு ஒப்பந்தப்படி அங்கு மீன் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், அந்தோனியார் ஆலயத்துக்குப் போய் வரவும் இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், நடப்பது என்ன? இதுவரை இந்திய மீனவர்கள் 400 பேரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றிருக்கிறது. நேற்றுக் கூட பதினொரு மீனவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இலங்கை அரசின் இந்தத் துணிச்சலுக்கு இந்திய அரசின் போக்குத்தான் காரணம்.
அமெரிக்கா, பாகிஸ்தான் என்று உலக நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவைத் தனிமைப்படுத்தும் முரண்பட்ட போக்கை இலங்கை அரசு கடைப்பிடித்து வருவதையும் கவனிக்க வேண்டிய நேரமிது.
எனவேதான் கச்சதீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது. பல்வேறு இனம், மொழி, மக்கள் வாழும் இந்தியாவில் எந்தப் பாரபட்சமும் இல்லாத ஆட்சி நடக்கிறது. ஆனால், இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள தமிழர்களின் நிலையைப்பற்றி சொல்லி மாளாது. அங்குள்ள, அரசுத்தேர்வுகளில் சிங்களவர்களைவிட தமிழர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்கிற பாரபட்சம் முதன்மையானது. யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்திய இலங்கை அரசு, திட்டமிட்டே தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையைச் செய்து வருகிறது” என்றவரிடம், `அப்படியென்றால், பிரபாகரனின் தமிழீழப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கிறதா?’ என்றோம்.
“இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு வரும் நிலையில், பிரபாகரனை மையப்படுத்திப் பேசுவது தேவையற்றது. இப்போதைய உடனடித் தேவை, தமிழ் மக்கள் மீதான போர் நிறுத்தம். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளன்று கூட தமிழர்கள் வழிபாடு நடத்தும் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியது, இலங்கை இராணுவம். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும், `போரைத் தவிர்த்து, அரசியல் தீர்வு வேண்டும்’ என்றே கூறியிருக்கிறார். எனவே, அண்டை நாட்டில் நம்மொழி பேசும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கிருக்கிறது என்பதை மறுக்க முடியாது” என்று சொல்லி முடித்தார் தோழர் நல்லகண்ணு.
தமிழகம் ஏழ்மையில் இருப்பதற்கு ரங்கநாதன் தெரு தான் சாட்சி!- ‘முதல்வர் கமெண்ட்’டுக்கு பதிலடி
Posted: நவம்பர் 25, 2010 in Uncategorized
‘‘சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு வைப் பாருங்கள், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரியும்’’ என்று அண்மையில் நடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் விலைவாசி உயர்வு பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விக்கு, முதல்வர் கருணாநிதி பதிலளித்திருந்தார்.
முதல்வரின் இந்த கமெண்ட், வரலாறு காணாத விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கும் பொது மக்களின் ‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக’ இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கலைஞரின் விலைவாசி உயர்வு கமெண்ட் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சட்டப் பேரவை உறுப்பினர் பாலபாரதியிடம் கேட்டோம்.
‘‘மத்திய அரசின் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின், ‘விலைவாசியைக் கட்டுப்படுத்த ஆன்_லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும்’ என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
‘விலைவாசி உயரவில்லை, வாங்கும் சக்தி கூடியிருக்கிறது. ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலைமோதுகிறது’ என்று முதல்வர் சட்டப்பேரவையில் பேசுகிறார். இது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத தி.மு.க. அரசின் இரட்டை நிலையைத்தான் காட்டுகிறது.உண்மையில், பொதுமக்களின் கடன் வாங்கும் சக்திதான் கூடியிருக்கிறது. அத்தியாவசிப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
பேரவையில் என்னுடைய கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சர் அன்பழகன், ‘விலைவாசியே உயரவில்லை’ என்றார். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்வது பற்றியே தெரியாத நிதியமைச்சருக்கு விலை வாசி உயர்வைப் பற்றி என்ன தெரியும்?’’ என்று கேட்கிறார், பாலபாரதி.
இது குறித்து ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பதிடம் பேசினோம்.‘‘இன்பத் தமிழ்நாட்டில் ஏழ்மை இருக்கிறது என்பதற்கு சாட்சிதான் ரங்கநாதன் தெருவில் அலை மோதும் கூட்டம்!
ரங்கநாதன் தெருவில் துணி மலிவாகக் கிடைக்கும் என்பதால்தான் ஏழை, எளிய மக்கள் ரங்கநாதன் தெரு கூட்ட நெரிசலில் அல்லாடு கிறார்கள். உண்மையிலேயே வாங்கும் சக்தி கொண்டவர்கள் அங்கே போவார்களா? மின் தடையால் ஒரு லட்சம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்ட நிலையில் அதைத் தாங்கும் சக்தியை இழப்பதற்குள் கருணாநிதி ஆட்சி அகற்றப்பட வேண்டும்’’ என்றார், சம்பத்.
ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க் கெட்டான கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகரும் காய்கறி மொத்த வியாபாரியுமான வி.ஆர். சௌந்திரராஜனிடம் கருணாநிதியின் ‘கமெண்ட்’ பற்றி கேட்டோம்.
‘‘தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரையிலான 6 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வீட்டு மனையாகி விட்டன. பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர் வரை காய்கறி விளைந்த பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் சிறப்புப் பொருளாதாரம் மண்டலங்களாக உருமாறி நோக்கியா செல்போன், ஹுன்டாய் கார்களை உற்பத்தி செய்கின்றன. சென்னை, தரமணியிலிருந்து பாண்டிச்சேரி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து தினமும் 10 லோடு வெண்டைக்காய் வந்து கொண்டிருந்தன. இன்றைக்கு இந்த விவசாய நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டன.கோஸ், கேரட், பீட்ரூட், பீம்ஸ், காளிஃபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் உதகை, கொடைக் கானலிருந்து வந்து கொண்டிருந்தன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஓர் ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் மானியமாக கொடுத்து விளைநிலங்களில் தேயிலைப் பயிர் செய்ய ஊக்குவித்தது. இதனால் அங்கிருந்து வர வேண்டிய காய்கறிகள் பாதிக்குப் பாதி குறைந்து விட்டன.தமிழ்நாட்டில் காய்கறி வரத்து குறைந்து விலை உயர்வுக்கு இந்த அரசுதான் காரணம்.
பெங்களூரு மற்றும் ஐதராபாத்திலிலிருந்து சென்னைக்கு 6 ஆயிரம் ரூபாய் இருந்த லாரி வாடகை டீசல் விலையேற்றத்தால் தற்போது 18 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. தேனியில் இருந்து சென்னைக்கு லாரி வாடகை 9 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது’’ என்று அடுக்கிக்கொண்டே போனார்.
இயற்கை விவசாயி பாமயனிடம் பேசினோம். ‘‘கலைஞர் சொல்வது ஒருவகையில் சரிதான்! ஒரு சாராரின் வாங்கும் சக்தி உண்மையில் அதிகரித்திருக்கிறது.
ஆனால், ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் அவர்கள் வெறும் மூன்றிலிருந்து 4 சதவிகிதம்தான். ஏழை மக்களுக்கு இலவசங்களை வழங்கி விலையேற்றத்தால் உருவாகும் எதிர்ப்பை அரசு அடக்கி வைத்திருக்கிறது. விலை அதிகரித்து விட்டதால், கிராமப்புற மக்கள் ‘புரோட்டீன்’ அதிகமுள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் கிராமப் புறக் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். விலை குறைவான கேசரி பருப்பை வெளிநாடுகளிலிருந்து அரசு இறக்குமதி செய்கிறது.
இந்த வகை பருப்பை தொடர்ந்து சாப்பிட்டால் கை, கால்கள் செயலிழந்துவிடும் என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது-’’ என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார், பாமயன்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி பேசும்போது, ‘‘ ரேஷன் கடை, பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் நிரம்பி வழியும் கூட்டம், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டதைக் காட்டுகிறது என்று முதல்வர் சொன்னாலும் சொல்வார்’’ என்றார்.
‘‘கடந்தாண்டுகளில் 3 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ முட்டைக் கோஸின் விலை இன்றைக்கு 10 ரூபாய். 13 ரூபாய்க்கு விற்ற கேரட் இப்போது கிலோ 25 ரூபாய். 8 ரூபாய்க்கு விற்ற உருளை 15 ரூபாய் ஆகிவிட்டது. கத்தரி கடந்தாண்டு கிலோ 5 ரூபாய். இப்போது, 15 ரூபாய். பத்து ரூபாய்க்கு விற்ற வெண்டை இப்போது 20 ரூபாய். பெல்லாரி வெங்காயம், கிலோ 40 ரூபாய் என்றாகிவிட்டது. கடந்தாண்டு இதன் விலை வெறும் 18 ரூபாய். 13 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயமும் 35 ரூபாய். 6 ரூபாய் புடலங்காய் இப்போது 20 ரூபாய். ஒரு கட்டு கொத்துமல்லியின் பழைய விலை 5 ரூபாய். இப்போது 40 ரூபாய்! முருங்கை கிலோ 10 ரூபாயிலிருந்து 60 ரூபாய் ஆகி விட்டது’’ என்று கோயம்பேடு வியாபாரிகள் பட்டியல் வாசிக்கிறார்கள்.–
நன்றி
வேலு.வெற்றிவேல்குமுதம் ரிப்போர்ட்டர்
அதிர்ச்சி ரிப்போர்ட்…உணவுப் பொருட்களிலும் காலாவதி!-ரகசிய காமிராவில் சிக்கிய குடோன்
Posted: நவம்பர் 23, 2010 in Uncategorizedகாலாவதியான மருந்து, மாத்திரைகள் புழக்கத்தில் விடப்பட்ட விவகாரம் மக்களிடையே ஏற்படுத்திய பீதி இன்னும் அடங்கவில்லை. மக்களின் உயிரோடு விளையாடும் அந்த மோசடி சம்பவத்தையே தூக்கி சாப்பிடுமளவுக்கு மற்றொரு காலாவதி சர்ச்சை நம் காதுகளுக்கு எட்டியுள்ளது. நம் வாசகர் ஒருவர் கூறிய அந்தத் தகவலை நம்மால் நம்பவே முடிய வில்லை.
‘இப்படியெல்லாம் நடக்குமா’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த வாசகர், ‘‘சென்னையில் பெரிய பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் விற்ப¬னை ஆகாத காலாவதியான சாக்லெட்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஒரு கும்பல் மொத்தமாக வாங்கி, அதை மக்களை ஏமாற்றி விற்கிறார்கள். புதிய பாக்கெட்களில் அடைத்து மளிகைக் கடைகளுக்கு சப்ளை செய்கிறார்கள்.குறைந்த விலைக்குக் கிடைக்கிறதே என்ற பேராசையில் பல மளிகைக் கடைக்காரர்கள் அவற்றை வாங்கி விற்பனை செய்கிறார்கள். அவற்றை காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவோருக்கு என்னென்ன உடல் உபாதைகள் ஏற்படுமோ தெரியவில்லை? நீங்களாவது அந்த மோசடியை அம்பலப்படுத்தி மக்களைக் காப்பாற்றுங்கள்’’ என்று வேதனையுடன் கோரிக்கை வைத்தார்.
‘இவ்வளவு சொல்கிறார்; உண்மையாக இருக்குமோ’ என்று பொறி தட்ட, விசாரணையில் இறங்கினோம்.சென்னை ராயபுரம் ஜி.ஏ.ரோடு பகுதியில் ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி அமைந்துள்ள தெருவிலிருந்து பிரியும் ஒரு குறுகலான சந்தில் நாம் தேடிச் சென்ற குடோன் அமைந்துள்ளது. தெருவில் இருந்து நூறு மீட்டர் தூரம் இருட்டான அந்த சந்தைக் கடந்து நம் சட்டைப்பையில் பொருத்தப்பட்ட ரகசிய கேமிரா உடன் குடோனை நெருங்கினோம்.
புதிய நபர்கள் யாரும் எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியாத அளவுக்கு அந்த இடம் ரகசியமாக இருக்கிறது.கல்லா பெட்டியில் கழுத்தில் தடித்த தங்கச் செயினுடன் ஓர் இளைஞரும், வெள்ளை வேட்டி சட்டையுடன் முதியவர் ஒருவரும் அமர்ந்திருந்தனர். குடோனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் (!) கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்க இரண்டு சிறுவர்கள் வேலை செய்கிறார்கள். யாருக்கும் நம் மீது சந்தேகம் வரவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு அந்த இடத்தை நோட்டமிட்டோம். பெரும்பாலான பொருட்கள் அட்டைப்பெட்டிகளில் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்தன. முதலில் அங்கிருந்த விலையுயர்ந்த பாடி ஸ்ப்ரேக்களை எடுத்துப் பார்த்த நமக்கும் பெரும் அதிர்ச்சி.
2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த பாடி ஸ்ப்ரேக்கள் காலாவதி ஆகி ஓராண்டாகிவிட்டது. அடுத்து முன்னணி ப்ராண்ட் சோன் பப்டி, கிட்கேட் சாக்லெட், 50, 100, 250 கிராம் பாக்கெட்களில் த்ரீ ரோஸஸ், ரெட்லேபிள், ரிலையன்ஸ் டீத்தூள்கள் பாக்கெட்கள் நம் கண்ணில் சிக்கின. அவை எல்லாம் காலாவதியானதே!
சக்தி மசாலா, ப்ரு காபித்தூள், அணில் அப்பளம் என எதை எடுத்தாலும் குறைந்தபட்சம் ஆறுமாதங்கள் காலாவதியாகி இருந்தன. டிவி விளம்பரத்தில் நடிகை த்ரிஷா உபயோகிக்கும் விவல் மற்றும் லக்ஸ் போன்ற (காலாவதி) சோப்புகளும் அங்கே இருந்தன.அங்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் நாம் கண் முன்னாலேயே மொத்தமாகவும், சில்லறை யாகவும் பொருட்களை வாங்கிச் சென்றனர். பொருட்களை வாங்கி கல்லா பெட்டியில் இருந்த இளைஞரிடம் காட்டினால் குத்துமதிப்பாக ஒரு விலையைச் சொல்கிறார். பொறுப்பாக பில்போட்டு (!) பணத்தை வாங்கி கல்லாவில் போடுகிறார். பின்னர், ரிலையன்ஸ் ப்ரஷ் என அச்சிடப்பட்ட பாலிதீன் பைகளில் அந்தப் பொருட்களைப் போட்டுத் தருகிறார்கள்.
சாக்லேட், சோன் பப்டி, அப்பளம், சோப்பு, ஷாம்பூ என நாமும் சில காலாவதி பொருட்களை வாங்கிக் கொண்டோம். எல்லா பொருட்களும் பழையதாக இருக்கிறதே என்று நாம் கேட்டதும், அந்த முதியவர் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘‘வேணானா வச்சிட்டு போ’ என்று மிரட்டல் தொனியில் பதிலளித்தார்.நமக்கும் ரிலையன்ஸ் ப்ரஷ் பையில் பொருட்களைப் போட்டுக் கொடுத்தார். அந்த இளைஞர் கொடுத்த பில்லை பத்திரப்படுத்திக் கொண்டோம். மீண்டும் ஒருமுறை அந்தக் குடோனை நோட்டமிட்டோம். அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்களும் அங்கே விற்பனைக்கு இருந்தது. அவற்றை பிரபல ‘அணில்’ ப்ராண்ட் என பெயரிடப்பட்ட பாலிதீன் பைகளில் அடைத்து விற்கிறார்கள்.
கொசுவர்த்தி சுருள், திரவ கொசு மருந்துகளின் அனைத்து முன்னணி ப்ராண்டுகளும் இருந்தன. ஜங்சன் பாக்ஸ், ஓயர், எலக்ட்ரிக் குக்கர் என எலக்ட்ரிக்கல் அயிட்டங்களும் அங்கே அவைலபிள்! மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் ஊறிக்கொண்டிருந்தன.
மெல்ல அங்கிருந்து நகர்ந்தோம்.நம்மிடம் தகவல் சொன்ன வாசகரிடம் பேசினோம். தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு பேசிய அவர், ‘‘பல ஆண்டுகளாக இங்கே இந்த விவரீதம் நடக்கிறது. பிற கடைகளில் கிடைப்பதைவிட குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வசதியில்லாதவர்கள் இவற்றை வாங்கிச் செல்கிறார்கள். காலாவதி பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இங்கிருந்து மொத்தமாக பொருட்களை வாங்கிச் சென்று சில மளி¬க்கடைகளில் விற்பனை செய்கிறார்கள். காலாவதி பொருட்களை விற்கும் கும்பல் மாதம் மாதம் போலீஸாரைக் கவனித்து வருகிறார்கள்’’ என்று முடித்துக் கொண்டார்.
இதுவெல்லாம் சாத்தியமா? என்று நமக்குத் தெரிந்த வியாபாரி ஒருவரிடம் விசாரித்த போது, மேலும் அதிர்ச்சியாக இருந்தது.‘‘சார், இது ஓர் அண்டா சோற்று ஒரு சோறு பதம்தான். மருந்து, மாத்திரைகளுக்கு காலாவதி நாள் முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தால் அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்க முடியும். உணவு, நுகர் பொருள்களில் இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. சென்னையில் மட்டுமல்ல, தமிழக நகரங்கள் பலவற்றிலும் இப்படி காலாவதியான பொருள்கள் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துவிடும். பெரும்பாலும் உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகள், குடிசைப் பகுதிகள்தான் இவற்றின் சந்தை. நல்ல பிராண்ட், விலைக்குறைவு, ஏதோ கொஞ்சம் காலம் கடந்ததால் கெட்டுப் போய்விடாது என்ற மக்களின் மனநிலை ஆகியவைதான் இவற்றின் மூலதனம். மிகவும் காலம் கடந்துவிட்டால் பிரித்துக் கொட்டி, லூஸாக பொருள்களை விற்றுவிடுவார்கள். மருந்து, மாத்திரைகள் விஷயத்தில் காலாவதி காலம் குறித்து நடவடிக்கை எடுத்தது போல, உணவுப் பொருள்கள் நுகர்பொருள் விஷயத்திலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி கிடைத்த வரை லாபம் என்பதுதானே வியாபாரத் துறையினர் மனநிலை’’ என்றார் அவா.
நம்முடைய ‘ஆபரேஷன்’ குறித்து கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆஃப் இந்தியாவின் அறங்காவலர் தேசிங்கனிடம் தெரிவித்தோம். ‘‘நீங்கள் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. காலாவதி மருந்து விற்பனை பற்றி கேள்விப்பட்டோம். காலாவதி பொருட்களை மொத்தமாக வாங்கி விற்கிறார்கள் என்று முதல் முதலாகக் கேள்விப்படுகிறேன். இது சட்டவிரோதமானது. காலாவதியான பொருட்களால் உயிருக்கு ஆபத்தில்லாவிட்டாலும் உடல் உபாதைகள் ஏற்படும்’’ என்றார் தேசிங்கன்.
இது குறித்து, ஆரோக்யா சித்த மருத்துவமனை மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். ‘‘இப்படியும் செய்கிறார்களா’’ என்று அதிர்ச்சியைக் காட்டியவர், ‘‘இதுபோன்ற காலாவதியான பொருட்களை சாப்பிட்டால் வயிற்றின் செரிமானம் பாதிக்கப்படும். ஒவ்வொரு பொருட்களின் தன்மைக்கு ஏற்ப பேதி, வாந்தி, மயக்கம் ஆகியன ஏற்படலாம். தொடர்ந்து அவற்றை சாப்பிட்டால் ஈரல் கெட்டுப் போகும் அபாயம் உள்ளது. காலாவதியான சோப்பு, ஷாப்பூ போன்றவற்றைப் பயன்படுத்தினாலும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்’’ என்றார்.
மாபெரும் சென்னை நகரில் நம்மிடம் சிக்கியது ஒரே ஒரு குடோன்தான். மாநிலம் முழுவதும் இன்னும் எங்கெங்கே எத்தனை இருக்கின்றனவோ? தவறு நடப்பதை தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிவிட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? பார்ப்போம்.
நன்றி
வே.வெற்றிவேல்
குமுதம் ரிப்போர்ட்டர்
இந்தியாவில் நெருக்கடி நிலை காலத்தில் மிசா வில் (மெயின்டனன்ஸ் ஆஃப் இன்டர்னல் செக்கியூரிட்டி ஆக்ட்) கைது செய்யப்பட்டவர் களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஏன் என்பதுதான் அரசியலில் மில்லியன் டாலர் கேள்வி!
இந்தியாவில் 1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. நெருக் கடி நிலையை எதிர்த்தவர்கள் மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் ஓராண்டுக்கு மேலாக சிறையில் வாடினர். மிசாவில் கைதானவர்கள்தற்போது உயிருடனிருந்தால் அவர்களது விபரங்களையும், உயிருடன் இல்லாவிடில் அவர்களின் வாரிசுதாரர்கள் விபரங்களையும் சேகரிக்க தமிழக அரசு அந்த உத்தரவில் கூறியுள்ளது.
‘முறைகேடாக நடந்த ரேபரேலி தொகுதியில் இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது’ என்று அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு சொன்னது. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் அந்தத் தீர்ப்புக்கு முழு தடையை இந்திராவால் பெற முடியவில்லை. ‘பிரதமர் பதவியைத் தொடரலாம்; நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அப்போது, இந்திராவை பதவி விலக வலியுறுத்தி மிகப்பெரிய பேரணியை ஜெயப்ரகாஷ் நாராயணன் (ஜே.பி) நடத்தினார். அதில் ஆத்திரமடைந்த இந்திரா, இந்தியா மீது எமர்ஜென்ஸியை (1975 ஜூன் 25) திணித்தார். இதுதான் எமர்ஜென்ஸி மற்றும் மிசாவின் ப்ளாஸ் பேக்!
நெருக்கடி காலத்தில் மிசாவில் கைதாகி சென்னை மற்றும் கோவை சிறைகளில் கடும் சித்திரவதைகளுக்கு ஆளான வழக்கறிஞர் துரைசாமியிடம் பேசினோம்.
‘‘திருப்பூரில் உள்ள எனது வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். மிசாவில் சிறை சென்றவர்களில் யார் யார் எல்லாம் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பு எதற்கு என்று தி.மு.க.வினருக்கே தெரியவில்லை. சென்னை கமிஷனரிடம் விசாரித்தேன். ‘அரசு கேட்கிறது, காரணம் புரியவில்லை’ என்கிறார். இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப்படும் எமர்ஜென்ஸி காலத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சித்திரவதைகளுக்கு ஆளானோம். விடியலே தெரியாமல் சிறைகளில் வாடினோம். தற்போது 35 ஆண்டுகளுக்குப் பின் இப்படியொரு கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.
எமர்ஜென்ஸிக்குப் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. 20 ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்திருக்க முடியும். இப்போது செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மிசாவில் சிறைக்குப் போனவர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லை. இந்த விவரங்கள் நல்ல எண்ணத்தில் சேகரிக்கப்பட வில்லை. காலம் தாழ்ந்து வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’’ என்றார், துரைசாமி.
இந்தக் கணக்கெடுப்பு குறித்து மிசாவில் சிறை சென்ற பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செய லாளர் கு.ராமகிருட்டினனிடம் பேசினோம்.
‘‘அரசு இப்படியொரு கணக்கெடுப்பு நடத்து வது உண்மைதான். காலதாமதமான நிலைப்பாடு என்றாலும், 30 ஆண்டுகளுக்குப் பின் இதைச் செய்வது சிறப்பானதுதான். தமிழத்தில் கைதான பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் சிறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம். அவர்களை கணக்கெடுத்து கௌரவிக்கிறார்கள், அதை வரவேற்கிறோம். காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதைச் செய்ய வேண்டும். உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் கௌரவம் மிசா கைதிகளுக்கும் வழங்கப்படுகிறது. அங்கு போக்குவரத்துத் துறையில் அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல தமிழகத்திலும் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அரசியல் உள்நோக்கத்திற்காக இப்படியொரு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதா என்பது குறித்து கருத்தெதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என்று முடித்துக் கொண்டார்.
‘‘நெருக்கடி நிலையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக விசாரணை யின்றி கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகினர். பல சட்ட மன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும், அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக கைதானார்கள். இந்திய அளவில் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகப் பேர் கைது நடவடிக்கைக்கு ஆளானார்கள். தமிழகத்தில் தி.மு.க., ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட், திராவிட கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிறை சென்றார்கள். வாஜ்பாய், அத்வானி, லல்லு பிரசாத் யாதவ், சந்திர சேகர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் கைதானவர்களில் முக்கியமானோர்.
ஓய்வுபெற்ற ஐ.எஸ்.ஏ. அதிகாரி எம்.ஜி. தேவசகாயம், நெருக்கடி நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில விவரங்களை அண்மையில் கேட்டிருக்கிறார். ஆனால், ‘நெருக்கடி நிலை பிரகடனம் தொடர்பான ஆவணங்கள் இல்லை’’ என்று பதில் வந்திருக்கிறது. எமர்ஜென்ஸி காலப் பதிவு களை மக்களின் மனதிலிருந்து அகற்றவே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் முதல்வர், எமர்ஜென்ஸியைக் கையில் எடுத்திருக்கிறார். எமர்ஜென்ஸியை நினைவுபடுத்தி கட்சியினரை ஒற்றுமைப்படுத்த நினைக்கிறாரா? அல்லது காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த நினைக்கிறாரா? என்பது புரியவில்லை” என்கிறார், மூத்த தி.மு.க. பிரமுகர்.
மிசாவில் தி.மு.க.விரைத் தவிர பல்வேறு கட்சிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிறைக்குச் சென்றுள்ளனர். ஆனால், தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த மிசா கைதிகள் மட்டுமே தற்போது கணக்கெடுக்கப் படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது எப்படியிருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்! தமிழக காங்கிரஸ் கட்சியினர் என்ன சொல் கிறார்கள்? தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இதுகுறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி நம்மிடம் பேசினார்.
‘‘சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு பென்ஷன் வழங்க ஆயிரத்தெட்டு காரணங்கள் கேட்கிறார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கேள்வியே இல்லாமல் தியாகிகளுக்கு இணையான பென்ஷன் வழங்குகிறது, தமிழக அரசு. இப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக காவல்துறையினர் மூலம் மிசாவில் சிறை சென்றவர்கள் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. அவர்களும் இனி கௌரவிக்கப்படுவார்கள். இதே நிலை தொடர்ந்தால், 1948_ல் அப்போதைய பிரதமர் நேரு சென்னை வந்தபோது அவர் மீது கல்லெறிந்தவர்களும், மதுரையில் இந்திரா காந்தி மீது தாக்குதல் நடத்தியவர்களும் கலைஞரால் கௌரவிக்கப்படுவார்கள். இதையும் காங்கிரஸ் காரர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் போலும்?’’ என்று சிரிக்கிறார் ராமமூர்த்தி!
மிசா விவகாரத்தை முதல்வர் கலைஞர் கையிலெடுத்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது. மிரட்டலா… பதுங்கலா? என்பது விரைவில் தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-வேலு.வெற்றிவேல்
குமுதம் ரிப்போர்ட்டர்
பிரபாகரனின் தாய் உயிருக்கு இந்தியாவே பொறுப்பு – வைகோ எச்சரிக்கை..!
Posted: அக்டோபர் 1, 2010 in Uncategorizedமுறைப்படி, இந்திய அரசுக்கு விண்ணப்பித்து விசா பெற்று தமிழகம் வந்திருந்த எண்பது வயதான உடல்நலம் குன்றிய மூதாட்டியை விமானத்தில் இருந்து கீழே இறங்கவிடாமல் செய்த செயல், தமிழர் நல அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வைகோவிடம் பேசினோம்:
பார்வதியம்மாளின் உடல்நிலை எப்படி உள்ளது..?
பார்வதியம்மாள் அண்மையில் தன் கணவரை இழந்ததால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நினைவு வரும்போதெல்லாம் “ஐயா.. ஐயா” என்று தன் கணவரை நினைத்து அழுகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகள் அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. பக்கத்தில் இருந்து பராமரிக்க பிள்ளைகள் இல்லை. அவர்கள் வாழ்ந்த வல்வெட்டித்துறை வீடு சிங்களவரால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுவிட்டது.
சிவாஜிலிங்கத்தின் முயற்சியால் அவர் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து கனடாவில் வசிக்கும் அவர் மகள் விநோதினிவசம் அவரை ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மலேசியாவில் தங்கியிருக்கின்ற அனுமதிக் காலம் 16-ம் தேதியன்று முடிவடைய இருந்தது.
பார்வதியம்மாள் எதற்காக சென்னை அழைத்து வரப்பட்டார்..?
உயர் நவீன மருத்துவச் சிகிச்சை வாய்ப்புள்ள சென்னைக்கு அவரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்து அதன் பின்னர் கனடாவுக்குச் செல்லும் அனுமதியைப் பெறலாம் என்று அண்ணன் பழ.நெடுமாறனும், நானும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம்.
இந்தியா வருவதற்கு முறைப்படி அனுமதி பெற பார்வதியம்மாள் விண்ணப்பித்தன்பேரில் இந்திய அரசு அனுமதி வழங்கி விசாவும் கொடுத்துவிட்டது. பிரபாகரனின் தாயார் என்று தெரிந்தே விசா கொடுக்கப்பட்டது. அதன்படி 16-ம் மாலை மலேசியாவில் விஜயலட்சுமி என்கிற பெண்ணுடன் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.
அவரை அழைத்து வருவதற்காக நெடுமாறனுடன் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தோம்.
அப்போது அங்கே என்ன நடந்தது..?
பத்தே கால் மணியளவில் திடீரென தமிழக போலீஸார் குவிக்கப்பட்டனர். வீடியோ கேமிராக்களோடு உளவுத்துறை போலீஸார் வந்தனர். இதனால் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விமானநிலையம் நோக்கிச் சென்றபோது சாலையிலேயே தமிழக காவல்துறையினர் எங்களை வழிமறித்தனர். எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? இதென்ன சர்வாதிகார நாடா? என்று கேட்டேன்.
காவல்துறை அதிகாரி ஒருவர் என் கையைப் பற்றி இழுத்து பிடரியைப் பிடித்துத் தள்ளினார். அதிர்ச்சியடைந்த நெடுமாறன், “எந்தச் சட்டவிதியின் கீழ் எங்களைத் தடுக்கிறீர்கள்..?” என்று கேட்டார். விமான நிலையத்திற்குள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கே அதிகாரம் உள்ளது. உங்களுக்கு இங்கே என்ன வேலை..?” என்று கேட்டு பயணிகளை வரவேற்கும் இடத்தில் அமர்ந்துவிட்டோம்.
அதற்குள்ளாக பார்வதியம்மாள், மற்றும் அவருக்குத் துணையாக வந்த விஜயலட்சுமி ஆகியோரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
அவரைத் திருப்பி அனுப்பக் காரணம் என்ன..?
எண்பது வயதில் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று இந்திய அரசு அஞ்சுகிறதா..? அவர் திருப்பி அனுப்பப்பட்ட மறுநாளே ராஜபக்சேவின் மகன்கள் பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் பார்க்க சென்னை வந்தார்களே.. என்ன அநியாயம்..? கொலை பாதகம் செய்த ராஜபக்சேவுக்கு திருப்பதியில் பூர்ண கும்ப வரவேற்பு. ஆனால் ஒரு பக்கம் விசா வழங்கிவிட்டு, மறுபக்கம் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதன் மர்மம் புரியவில்லை.
இதற்கு யார் காரணம்..?
தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம்.. பார்வதியம்மாள் தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்பதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டு அவரைத் திருப்பியனுப்பிவிட்டார் கருணாநிதி. அவர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்திய அரசு பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பிருக்கிறது.
பார்வதியம்மாளை முதல்வர் ஏன் திருப்பியனுப்ப வேண்டும்..?
இதற்குக் காரணமெலலாம் சொல்ல விரும்பவில்லை. என் மீதும், நெடுமாறன் மீதும் விமான நிலையத்தில் தமிழகக் காவல்துறையினர் நடத்திய அராஜகம் இதற்கு சாட்சி. கருணாநிதியைக் கேட்டுத்தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறேன் என்று புதிய தலைமைச் செயலகத் திறப்பு விழாவில் மன்மோகன்சிங் பேசுகிறார். இதனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபப்பட்ட சம்பவத்தில் எனக்குச் சம்பந்தம் இல்லை என்று சொல்லி கருணாநிதி தப்பிக்க முடியாது. என்னுடைய கேள்வி இதுதான். அங்கே தமிழகக் காவல்துறை வர வேண்டிய அவசியம் என்ன..?
பார்வதியம்மாள் சென்னைக்கு வருவது குறித்து உங்களுக்கு எப்போது தெரியும்..?
இரண்டு நாட்களுக்கு முன்பு தெரியும்..
இந்தத் தகவல் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தியாவது பார்வதியம்மாள் தரையிறங்க அனுமதி பெற்றிருக்க முடியும் என்று தமிழுணர்வாளர்கள் வருத்தப்படுகிறார்களே..?
கருணாநிதியைக் குற்றம் சொல்லத் துணிச்சல் இல்லாதவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கலாம். சிலர் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் உடல் நலமில்லாமல் வருகிறார். நாங்கள் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த நேரத்தில் பரபரப்பு வேண்டாம் என்று நெடுமாறன் நினைத்திருக்கிறார். விசா கொடுக்கப்பட்டதால் அவரைத் திருப்பி அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
ம.தி.மு.க. அறிவித்திருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம்..?
பார்வதியம்மாளுக்கு மத்திய அரசு செய்த அநீதியில் துரோகத்தில் தமிழக அரசு உடந்தையாக இருந்தது என்பதை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு போகப் போகிறோம். அவரை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். மாறாக, அவர் திரும்பவும் இலங்கை செல்ல நேர்ந்து அங்கே அவரது உடல் நலத்துக்கோ, உயிருக்கோ கேடு ஏற்பட்டால் இந்திய அரசுதான் அதற்குப் பொறுப்பு..

கொழும்பில் மாநாட்டை நடத்தி தமிழர்களின் பிரச்னையைத் திசை திருப்பப் பார்க்கிறது இலங்கை அரசு என்ற குரல் உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளிடம் இருந்து எழுந்துள்ளது.
இவ்வளவு எதிர்ப்புக்குக் காரணம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் முருகபூபதி என்பவர் கொழும்பு நகரில் ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது தான்.
‘‘உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல. மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது.மாநாட்டை இலங்கையில் நடத்துவதைவிட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.பிரச்னைகளை சுதந்திரமாக விவாதிக் கலாம்’’என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
‘‘சிங்கள அரசின் நயவஞ்சக எண்ணத்தைப் புரிந்துகொண்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தப் போலிப் பகட்டு மாநாட்டை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்’’ என்று எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், கவிஞர்கள் அறிவுமதி, தாமரை, பத்திரிகையாளர் சுதாங்கன் உள்ளிட்டோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
எழுத்தாளர்கள் மாநாட்டைப் புறக்கணிக்க காரணங்கள் என்ன என்று, மித்ரா பதிப்பக உரிமையாளரும்,எழுத்தாளருமான எஸ்.பொ.விடம் பேசினோம்.
‘‘கலை-இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப்படுத்தும் ராஜபக்ஷேவின் திட்டம்தான் உலக எழுத்தாளர் மாநாடு! சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம்.
இலங்கையில் அரசு அதிகார மையங்களுக்கு வளைந்து கொடுத்து தங்களுடைய வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்ளும் ஒரு சாராரும், தமிழ் முஸ்லிம்களில் ஒரு சாராரும்,ஈழப்போரில் தொடர்பில்லாத மலைவாழ்த் தமிழர்களும், மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்த்தேச மறுப்பாளர்களான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரும் சிங்கள இனவெறி இலங்கை அரசுக்கு துணை போகிறார்கள்.
தமிழினத்தை அழித்து மாநாடு என்ற பேரில் அரைத்த மிளகாயை தமிழர்களின் அடிக்காயத்தில் தடவப் போகிறார்கள். இதை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கப் போகிறது!
1970-களில் 4-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கை அரசு கொழும்பில் நடத்த முடிவு செய்தது. அதை எதிர்த்து தமிழர்கள் பூமியான யாழ்ப்பாணத்தில் அம்மாநாட்டை நடத்தினார்கள். அன்று தோற்றுப் போனவர்கள் இன்று இந்த மாநாடு மூலம் சாதிக்கப் பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் எதிர்த்து எழுதிய என் மீது மாநாட்டின் அமைப்பாளரான முருகபூபதி 10கோடி ரூபாய் மான நஷ்ட வழக்குப் போடுவதாக மிரட்டுகிறார். 60 ஆண்டுகளாக எழுதி வருகின்ற எனக்கு கருத்துச் சொல்ல உரிமை கிடையாதா?
ஜெயகாந்தன், பொன்னீலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்கள் இம்மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்கள்.எழுத்தாளர்களாக மக்கள் மத்தியில் அறியப்பட்ட படைப்பாளிகள் எவரும் அதில் கலந்து கொள்ளப்போவதில்லை. எதையாவது எழுதி முகவரி தேடியலையும் ஒரு கூட்டம்தான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போகிறது’’என்று கொந்தளித்தார், எழுத்தாளர் எஸ்.பொ.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்திடம் பேசினோம்.

‘‘ஐ.நா. சபையில் நடக்கும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை தொய்வடைச் செய்ய இலங்கை அரசுக்கு இம்மாநாடு பயன்படும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்’’ என்று முடித்துக்கொண்டார், செயப்பிரகாசம்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழகம் மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு விசா, இலவச வானூர்தி பயணச்சீட்டு, இலவச தங்குமிடம், இலங்கையை சுற்றிப் பார்க்கும் வசதி வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
‘இலவசங்களைக் காட்டினால் தமிழன் மண்டியிட்டு மயங்கி விடுவான்’ என்ற ரகசியம் கடல் கடந்து ராஜபக்ஷேவையும் அடைந்திருக்கிறது என்று கிண்டலாக சொல்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.
- வேலு.வெற்றிவேல்
-குமுதம் ரிப்போட்டர்


நன்றி
வேலு.வெற்றிவேல்
குமுதம் ரிப்போட்டர்
by admin on 14/01/09 at 2:16 pm